2022 வித்தியாசமான பணம் சம்பாதிக்கும் முறை (Make money online Tamil)

என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான நபர்களுக்குத் தெரியாத வித்தியாசமான பணம் சம்பாதிக்கும் முறை இணையத்தில் பணம் சம்பாதிப்பது தான்.

இந்த பதிவில் என்னுடைய அனுபவங்களோடு இணைந்த ஒரு அலசலைப் பார்க்கலாம்.
இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்றாலே பெரும்பாலானவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும் நான் என்ன வேலை செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும், அதற்கு பணம் எப்படி செலுத்துவார்கள் போன்ற பலவிதமான புரிதலற்றத் தன்மை இருக்கும். இதிலும் குறிப்பாக பிறர் எப்படி பணம் எடுக்கிறார்களோ அதையேதான் முயற்சித்து வெற்றி காணலாம் என்று நினைப்பவர்கள் ஏராளம்.

ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். இணைய சந்தை என்பது நீங்கள் நினைத்துப் பார்ப்பதை விடபன்மடங்கு பெரியது. இங்கே பலர் கோடிகளில் லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள் என்றால், நீங்கள் முயற்சித்தால் நிச்சயம் ஏன் ஆயிரத்தில் சம்பாதிக்க முடியாது.

இணையதளத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த இடத்திலும் பிறருக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து, உங்களுக்காக உழைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

உண்மையிலேயே இதில் சாதிக்க நினைப்பவர்கள் டேட்டா என்ட்ரி, டைப்பிங், இணைய சர்வே போன்றவற்றின் பக்கம் போகாமல் இருங்கள்.
ஏதேனும் ஒரு விதமான கண்டெண்ட் கிரியேஷன் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

  1. காணொளி (Youtube)
  2. எழுத்து (Blog Articles)
  3. ஆடியோ (Podcasts)

இவை மூன்றில் உங்களுக்கு விருப்பமானது எதுவோ அதைத் தேர்வு செய்வது நல்லது. அல்லது முயற்சித்துப் பார்த்து, எது உங்களுக்கு சரியாக வரும் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

இணையத்தில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் கைவிட வேண்டிய 6 விஷயங்கள்:-

நிச்சயமாக, நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன், இந்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கினேன் என்று கூறி உங்களுக்குள் நம்பகத்தன்மையை ஏற்படுத்தப்போவது கிடையாது. ஏனென்றால் இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது பிறர் ஏற்படுத்தும் நம்பிக்கையில் கிடையாது, நீங்கள் உண்மையில் உணரும் நம்பிக்கையில் தான் உள்ளது.

நான் ஒரு லட்சம் சம்பாதித்தாலும், பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் அதனால் உங்களுக்கு எந்த ஒரு பலனும் கிடையாது. உங்கள் சம்பாத்தியம் முழுக்க முழுக்க உங்களுடைய விடா முயற்சியிலும், திறமையிலும் தான் அடங்கியுள்ளது.

எனவே பிறருடைய பேமெண்ட் புரூப் பார்த்து நீங்கள் முயற்சிக்கலாமா வேண்டாமா என முடிவு செய்வது முற்றிலும் முட்டாள்தனமான ஒன்று. இதை நான் வெளிப்படையாகக் கூறுவதில் எந்தத் தயக்கமும் இல்லை.

1) நீங்கள் முயற்சிக்காததன் காரணத்தைக் கூறுவதை நிறுத்தி விடுங்கள்:-

நீங்கள் வித்தியாசமாக ஏதேனும் முயற்சிக்கும் போது, நிச்சயமாக சுற்றி இருப்பவர்கள் உங்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். பலவிதமான கேள்விகளை உங்கள் மீது தொடுப்பார்கள். நீங்கள் வெற்றி பெறவில்லை என்றால் பல விதங்களில் உங்களை ஏளனம் செய்வார்கள்.

இதை எதுவுமே காதில் போட்டுக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அவர்களுக்கு இதைப்பற்றி சுத்தமாக ஒன்றுமே தெரியாது.

மேலும், நீங்களே உங்களுக்கு சரியான திறமை இல்லை, எங்கள் வீட்டில் இதை யாராவது பார்த்தால் என்ன செய்வது, இணையத்தில் பல பேருக்கு மத்தியில் நான் எப்படி சாதிப்பது, எனக்கு சரியாக பேசத் தெரியாது, எழுதத் தெரியாது காணொளி உருவாக்க தெரியாது என்பது போன்ற தேவையில்லாத காரணங்களைக் கூறிக்கொண்டு, எதையுமே முயற்சிக்காமல் பூஜ்ஜிய நிலையிலேயே இருக்க வேண்டாம்.
எதுவாக இருந்தாலும் நாம் முயற்சித்தல் சிறுக சிறுக கற்கலாம் என்பதை நம்புங்கள்.

2) வெறுமையை சமாளிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்:-

இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது மற்ற பணம் சம்பாதிப்பு முறை போன்று கவர்ச்சியானது கிடையாது. உங்களுடன் பணிபுரிய யாரும் இருக்க மாட்டார்கள். பேச்சுத் துணைக்கு ஆள் இருக்காது. நீங்களே தான் அனைத்தையும் செய்ய வேண்டும். பெரும்பாலும் தனிமையிலேயே இருக்க நேரிடும். இதை நீங்கள் சமாளிப்பதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சில சமயங்களில் கண்டெண்ட் உருவாக்குவது சாவை விடக் கொடுமையான உணர்வை ஏற்படுத்தும். இதுபோன்ற வெறுமையான நிலையை ஏற்றுக்கொண்டு கையாளக் கூடிய மனப்பக்குவம் உங்களிடம் இருக்க வேண்டும்.

ஒரு கண்டெண்ட் கிரேட்டராக நீங்கள் பிறருக்காக ஏதோ ஒரு வகையில் உதவுகிறீர்கள் என்பதை உணர்ந்தால், இதை எளிமையாக சமாளிக்கலாம்.

3) இலக்குகளை மட்டும் நிர்ணயம் செய்வது:-

வெறும் இலக்குகள் மட்டும் உங்களை இங்கே வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்று விடாது. என்னதான் ஆயிரம் பேர் ஆயிரம் விஷயங்களை சாதிப்பேன் என்று கூறினாலும், அனைவரும் அதை சாதித்துவிடுவது கிடையாது.

நான் ஒரு நிறுவனத்தைத் தொடங்கிய பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுக்கப் போகிறேன்” என்பதை கேட்பதற்கு அழகாக இருக்கும்.

ஆனால் அதில் இருக்கும் சவால்கள் என்னென்ன, முதலில் என்னென்ன விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும், எப்படி தொடங்க வேண்டும், யாரை பணியில் அமர்த்த வேண்டும் என முடிவெடுத்து செயல்படுத்துவது மிகவும் கடினம். அதை சிறுக சிறுக தான் நம்மால் செயல்படுத்த முடியும்.

எனவே வெறும் இலக்குகள் மட்டும் வைத்திருக்காமல், நீங்கள் தேர்ந்தெடுத்த ஒரு விஷயத்தில் வெற்றி காண்பதற்கான படிக்கட்டை ஒவ்வொன்றாக கட்ட முற்படுங்கள். அதுவே உங்களுக்கு வெற்றியை ஏற்படுத்தும். நீங்கள் முயற்சிக்க விரும்பும் அந்த குறிப்பிட்ட துறை சார்ந்த, அனைத்து விதமான அடிப்படைகளையும் முதலில் கற்றுக்கொள்ள முயலுங்கள். அதுவே உங்களுக்கு அடுத்து அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையை ஊக்குவிக்கும்.

4) எதிர்க் கருத்துக்களை கண்டுகொள்ள வேண்டாம்.

இணையதளத்தில் ஏதோ ஒன்று செய்யப் போகிறீர்கள் என்றால், நீங்கள் பலவிதமான மக்களை எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம். அங்கே பலர் உங்களுடைய கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள் சிலருக்கு உங்கள் கருத்துக்கள் மீது முரண்பாடு ஏற்படும். எனவே அது போன்றவர்கள் கூறும் எதிர்மறையான விஷயங்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்.

அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியுமென்றால் புரிய வைக்கலாம், அல்லது அதுபோன்ற கருத்துக்களுக்கு எதிர்வினை புரியாமல் அமைதியாக இருந்து விடுவது நல்லது. இல்லை என்னால் எதிர்க் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் இந்தத்துறைக்கு நீங்கள் ஒத்து வர மாட்டீர்கள்.

என்னை எல்லாம் எத்தனையோ பேர் அசிங்க அசிங்கமாக திட்டி இருக்கிறார்கள். சிலர் ஏன் திட்டுகிறார்கள் என்று கூட எனக்குத் தெரியாது. அப்படியே பல்லைக் கடித்துக்கொண்டு நகர்ந்து விட வேண்டியதுதான்.

5) வாழ்க்கையில் எதையாவது இழந்து விடுவோமோ என்ற பயம் வேண்டாம்:-

இணையத்தில் பணம் சம்பாதிக்க நினைப்பது லாட்டரி சீட்டு வாங்குவதற்கு சமம். எப்போது எதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று சரியாகக் கூற முடியாது. பல விஷயங்களை முயற்சி செய்து பார்த்து, அதில் சரியானது எது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தத் துறையைத் தேர்வு செய்பவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனையே, ஒருவேளை இதெல்லாம் வெற்றி பெறவில்லை என்றால், நம் வாழ்வில் கிடைக்க வேண்டிய மற்ற விஷயங்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் தான்.

இந்த பயம் உங்களுக்கு ஏற்பட்டால், நீங்களும் சராசரியான வாழ்க்கை முறைக்குத் திரும்பி விடுவீர்கள். இந்த சராசரி வாழ்க்கை முறை உங்களுக்குள் சுகமான அனுபவங்களை ஏற்படுத்தி, வேறு எதையும் முயற்சிக்காத படி ஒரே வட்டத்தில் முடக்கிவிடும். எனவே நீங்கள் செய்வது எதுவாக இருந்தாலும் எதிலும் திசை திரும்பாமல், உங்கள் கவனத்தை செயலின் மீது மட்டும் வையுங்கள்.

6) தவறான அறிவுரை:-

இணையத் துறையை எடுத்துக் கொண்டால் உங்களுக்கு பலவிதமான அறிவுரைகள் பலரால் கிடைக்கப்பெறும். ஏன் நான் கூட பல சூட்சமங்களை உங்களுக்கு கற்றுத் தரலாம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நீங்களாகவே முயற்சி செய்து அதனுடைய அனுபவத்தை பெறாதவரை, நான் என்னதான் ஆயிரம் சூட்சமங்கள் கூறினாலும் அது உங்களுக்கு ஒத்து வராது.

ஒரு குறிப்பிட்ட துறையை முதலில் தேர்வு செய்யுங்கள் அதில் முயற்சி செய்யுங்கள் உங்களுடைய அனுபவங்கள் மூலமாக அது உங்களுக்கு ஒத்து வருமா வராதா என்பதை அறிந்து அடுத்த கட்டத்திற்கு நகருங்கள். அடுத்ததாக இன்னொரு தளத்தை தேர்வு செய்யுங்கள் அதில் முயற்சி செய்யுங்கள் அதில் பல விஷயங்களை கற்றுக்கொண்டு உங்களுடைய அனுபவத்தின் வாயிலாக அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு போகலாம் என்பதை செயல்படுத்துங்கள்.

இதுதான் உங்களுக்குள் ஓர் உண்மையான வளர்ச்சியை ஏற்படுத்துமே தவிர, பிறருடைய அறிவுரைகளைக் கேட்டு கொண்டு ஒவ்வொன்றாக உங்கள் செயல்பாட்டில் மாற்றிக்கொண்டே இருந்தால் இறுதி வரைக்கும் எதிலும் சரியான பிடிப்பு இருக்காது. முடிவு, முயற்சி, யோசனைகள் என அனைத்தும் முழுக்க முழுக்க உங்களுடையதாக இருத்தல் வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் சுயக் கற்றல் தான் உங்களை இங்கே மேம்படுத்தும் எனலாம்.

முடிந்தவரை எதிர்காலத்தில் நமக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்பதைப் பற்றி சிந்திக்காமல், இன்று நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதன் மீது கவனம் வைத்து செயல்படுவது நல்லது. “ஒருபோதும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது” என்ற மனநிலை இங்கே மிக மிக அவசியமான ஒன்று.
நன்றி😊 வாழ்த்துக்கள்👍…

Leave a Reply

Your email address will not be published.