இந்தப் பதிவை நான் தொடங்குவதற்கு முன், இணையத்தில் பணம் சம்பாதிப்பது பற்றி இரண்டு விஷயங்களை அனைவருக்கும் கூற விரும்புகிறேன்.

  1. முதலில் இந்த பதிவில் நான் குறிப்பிடப் போகும் விஷயங்களுக்கு திறமை என்பது மிக மிக முக்கியம். அதை முதலில் வளர்த்துக் கொண்டால் தான், இதில் உங்களால் எதையாவது சாதிக்க முடியுமே தவிர, 30 நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி என்ற புத்தகம் போன்று உங்களால் எதிலும் செயல்பட முடியாது.
  2. இரண்டாவது மிக முக்கியமானது என்னவென்றால், எடுத்த எடுப்பிலேயே குறுகிய காலத்தில் எதையும் சாதித்து விட முடியாது. நான் என்னுடைய முதல் டாலரை சம்பாதிக்க 8 மாதங்கள் ஆனது. ஒரு கணிசமான தொகையை எட்டுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. விடாமுயற்சி அமைதி, கடின உழைப்பு, தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற மனநிலை உங்களுடைய வெற்றி வாய்ப்பைத் துரிதப்படுத்தும். ஒரே நாள் இரவில் இது எதுவும் உங்களுக்குக் கிடைத்து விடாது.

 

Passive Income என்றால் என்ன?

தற்போது இருக்கும் இணைய உலகில் Passive income என்பது பற்றி அனைவரும் கட்டாயம் அறிய வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இதை ஒரு தங்கச் சுரங்கம் எனலாம். இதன் மூலம் நீங்கள் சராசரி வேலை செய்து சம்பாதிக்கும் பணத்துடன், இன்னொரு வடிவிலான பணம் ஈட்டும் தந்திரத்தை கற்க முடியும். இதனுடைய முக்கிய அம்சம் என்னவென்றால், இன்று நீங்கள் போடும் உழைப்பானது வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பலன் அளிக்க வாய்ப்புள்ளது. அதாவது நீங்கள் தூங்கும் போதும் பணம் ஈட்டும் தந்திரம் தான் Passive Income.

உலகின் தலைசிறந்த முதலீட்டாளர் வாரன் பஃபெட் என்ன கூறுகிறார் என்றால்,
“நீங்கள் தூங்கும் போதும் பணம் சம்பாதிக்கும் தந்திரத்தைக் கற்கவில்லை என்றால், உங்கள் வாழ்நாள் முழுவதும் பிறருக்காக உழைக்க வேண்டி இருக்கும்”

எனவே இந்த பதிவில் நான் அறிந்த மிகவும் விமர்சையான 5 Passive Income வழிமுறைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: Passive Income Ideas in Tamil.

1. YouTube

முதலாவதாக நான் கூற விரும்புவது youtube. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், என்னுடைய இணையப் பயணம் இங்கேதான் தொடங்கியது. அடிப்படையில் நான் ஒரு இயந்திரப் பொறியாளன். கார்ப்பரேட் உலகத்தின் கலாச்சாரத்தில் சிக்குண்டு எதிர்காலத்தை நோக்கிய சிந்தனையில் மூழ்கிய போது ஏற்படுத்திக் கொண்ட ஈடுபாடு தான், இணையதளம் சார்ந்த விஷயங்களை கற்க வேண்டும் என்பது. எதைப் பற்றியும் பெரிதாக சிந்திக்காமல் செய்து கொண்டிருந்த வேலையை விடுத்து யூடியூப் சேனல் ஒன்று தொடங்கினேன்.

எதுவுமே தெரியாத ஒருவனை திடீரென்று ஆற்றில் தள்ளிவிட்டால் என்ன ஆகுமோ அப்படி தான் இருந்தது என்னுடைய மனநிலை. ஒன்று நான் முழுக வேண்டும் அல்லது கரையேற வேண்டும். முடிந்தவரை மூழ்காமல் சிறுக சிறுக அனைத்தையும் கற்பது மூலமாக youtube பற்றிய ஒரு பரந்த அனுபவம் எனக்குக் கிடைத்தது.

இதற்காக நான் செலவு செய்த நேரம் ஏராளம். பல தூங்காத இரவுகள் என் கதை சொல்லும். யூட்யூபில் பணம் சம்பாதிப்பது பற்றி தற்போது அனைவரும் அறிந்த ஒன்றுதான். Just உங்களிடம் இருக்கும் திறன் பேசியை எதிரே வைத்து, பேச ஆரம்பியுங்கள். உண்மையான வேட்கையும் முனைப்பும் இருந்தால், அதை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதை சிறுக சிறுக நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

முதலில் அதைப் பற்றிய அடிப்படை அனைத்தையும் கற்றுக் கொள்ள நேரத்தை ஒதுக்குங்கள். youtube சார்ந்த விரிவான விஷயங்களை அடுத்தடுத்த பதிவுகளில் போடுகிறேன்.

2. Blogging

Blogging என்று ஒன்று இருப்பதை யூடியூப் சேனல் தொடங்கிய பிறகுதான் நானே அறிந்து கொண்டேன். இதை எப்படி செயல்படுத்துவது என்று எதுவுமே தெரியவில்லை. youtubeலேயே இதற்கான பல காணொளிகளைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன். இலவசமாகவும் நீங்கள் பிளாக்கர் டாட் காம் இணையதளத்தில் பதிவராக மாறலாம்.

ஆனால் எனக்கு சொந்தமாக இணையதளம் உருவாக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. தொடக்கத்திலிருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டு, இரண்டு இணையதளங்கள் எனக்காக நானே உருவாக்கினேன். இணையதளத்தில் மக்கள் எதை அதிகம் தேடுவார்களோ அது சார்ந்த பதிவுகளை நீங்கள் எழுத்து வடிவில் பதிவிட்டு பணம் சம்பாதிக்க முடியும்.

இதற்கு குறைந்தது ஒரு ஆண்டாவது நீங்கள் தொடர்ந்து பதிவுகளைப் போட வேண்டும். முதலில் உங்களுக்கான சரியான துறை எது என்று தேர்வு செய்து, அது சார்ந்த பதிவுகளை தினசரி பதிவேற்றுங்கள். சிறுக சிறுக அதனுடைய பார்வைகள் அதிகரித்து AdSense மூலமாக நீங்கள் பணம் ஈட்டலாம்.

3. Freelancing

ஃப்ரீலான்சிங் என்பது வீட்டில் இருந்து கொண்டே நீங்கள் வேறு ஒருவருக்கு, அவருக்குத் தேவையான ஒரு வேலையை செய்து தருவதாகும். முதலில் இதைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு, எதற்காகவே பிரத்தியேகமாக இருக்கும் வலைதளங்கள் மூலமாக கணக்கை உருவாக்கி, உங்களுக்கு என்ன திறன் இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு நீங்கள் அவர்களைப் பெற்று பணம் ஈட்ட முடியும்.

ஆனால் தொடக்கத்தில் இதில் ஆர்டர்கள் கிடைப்பது மிகவும் கடினம். ஏதாவது ஒரு ஆர்டர் முதலில் கிடைத்தால் அதை நன்கு செய்து கொடுத்துவிட்டு நல்ல ரேட்டிங் பெற்று விடுங்கள். நல்ல ரேட்டிங் பொருத்து அடுத்தடுத்த ஆர்டர்கள் உங்களுக்கு வர வாய்ப்புள்ளது. இதில் மிகவும் பிரபலமாக இருக்கும் இணையதளங்கள், Freelancer, Fiverr மற்றும் Upwork.

4. Selling Online Courses or Books.

இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்துமே இணையதளத்திற்கு மாறிப்போனதை நாம் கண்கூடாக பார்த்தோம். பள்ளி கல்லூரிகள் அனைத்தும் இணையம் வாயிலாகவே மாணவர்களுக்கு கல்வியை வழங்க முடிந்தது. ஆகவே எதிர்காலத்தில் இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். இதில் உங்களுக்கு ஏதாவது திறமை இருந்தால் அதை இணையம் வழியாக பிறருக்கு கற்றுத் தருவது மூலமாக ஒரு கணிசமான தொகையை நீங்கள் எட்டலாம்.

பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத விஷயங்களை ஒரு காணொளியாகவோ, அல்லது புத்தகம் வடிவிலோ தயாரித்து இணையத்திலேயே அதை விற்பனை செய்ய முடியும். வலிகளே வலிமையாக்கும் என்ற என்னுடைய முதல் மின்புத்தகம் மூலமாக நூறு ரூபாய் சம்பாதித்தேன். 100 ரூபாய் என்பது மிகவும் குறைந்த தொகையாக இருந்தாலும் அதை சம்பாதித்த வழிமுறை அசாதாரணமானது.

மக்களுக்கு தேவையான சரியான விஷயங்களை நீங்கள் புத்தகமாகவோ, காணொளியாகவோ விற்பனை செய்தால், கட்டாயம் அவர்கள் அதை வாங்க வாய்ப்புள்ளது. எதுவாக இருந்தாலும் முயற்சித்துப் பாருங்கள் அப்போது தான் அதனுடைய உண்மைத் தன்மை உங்களுக்குப் புரிய வரும்.

5. Affiliate Marketing

இறுதியாக இந்த ஒன்றை தான் அனைவரும் தேடிக் கொண்டிருப்பீர்கள் என எனக்கு தெரியும். நோகாமல் நோன்பு கும்பிடும் வேலை. மற்றதுறை அனைத்திற்கும் நீங்கள் அதிகப்படியான உழைப்பை போட வேண்டி இருக்கும். ஆனால் அஃபிளியேட் மார்க்கெட்டிங் மூலமாக பிறருடைய பொருட்களை மக்களை வாங்க வைப்பது மூலமாக நீங்கள் பணம் ஈட்டலாம்.

ஆனால் இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் நீங்கள் யாரை வாங்க வைக்க போகிறீர்கள் என்பது தான். அடிக்கடி உங்கள் நண்பர்களிடம் சென்று இதை வாங்குங்கள் அதை வாங்குங்கள் என்று லிங்க் அனுப்பினால், நம் குடும்பம் அனைத்தையும் கயிறு கட்டி வாயால் இழுப்பார்கள். எனவே நீங்கள் சிறிது இதில் பணம் செலவழித்து இன்ஸ்டாகிராம் ஆட்ஸ், பேஸ்புக் ஆட்ஸ், மற்றும் கூகுள் ஆட்ஸ் மூலமாக நீங்கள் பிறரை வாங்க வைக்க விரும்பும் பொருளை, விளம்பரமாகக் கொடுத்து பணம் ஈட்டலாம்.

முதல் முறை இதை தொடங்க நினைப்பவர்கள் அமேசான் அஃபிளியேட் முயற்சி செய்வது நல்லது. அவர்கள் கமிஷன் மிக மிக குறைவாக கொடுத்தாலும் தொடக்கத்தில் அதைப்பற்றி அறிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்னும் வேறு சில அஃபிளியேட் நெட்வொர்க்கில் இணைய, சிலர் இணையதளம் மற்றும் ஏதாவது சந்தைப்படுத்தும் ஆதாரங்களை எதிர்பார்ப்பார்கள். அமேசானில் இதுபோல் எதுவும் பெரிதாக எதிர்பார்க்க மாட்டார்கள். எளிதாக உங்களால் அமேசான் அஃபிளியேட் தொடங்க முடியும்.


முயற்சித்துப் பாருங்கள், பணம் சம்பாதிப்பதன் வேறொரு பரிணாமத்தை நீங்கள் அறிவீர்கள் என்பதற்கு நான் உத்திரவாதம். இது அனைத்திற்கும் மேலாக இதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம் உங்களை வித்தியாசமானவராக மாற்றும்.

என்னுடைய youtube, இணையதளம், கோரா, இன்ஸ்டாகிராம், பாட்காஸ்ட் போன்ற பலவற்றின் இணைப்புகளை கீழே குறிப்பிடுகிறேன். விருப்பம் இருப்பவர்கள் அதிலிருந்து உங்களுக்கு தேவையானது ஏதாவது இருந்தால் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் வெறும் 5 பணம் ஈட்டும் முறைகள் பற்றி தான் விவரித்து இருக்கிறேன். இதுபோன்று நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிலான விஷயங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது. எதிர்காலத்திற்கு ஏற்றவாறு நாம் தான் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.

நன்றி😊

Leave a Reply

Your email address will not be published.