Psychology of Money புத்தகம் எனக்கு கற்றுத்தந்த பாடம்…

  • நீங்கள் தற்போது சம்பாதிக்கும் பணம் உங்களுக்கு போதுமானதாக உள்ளதா ?
  • அதை உங்களால் சரியான முறையில் கையாள முடிகிறதா?
  • அது ஒருநாள் உங்களுக்கு நிதி சுந்தரத்தை ஏற்படுத்தி கொடுக்குமா?

நாம் அனைவருக்குமே பணம் என்கிற ஒன்றின் தேவையும், அதை அதிகம் ஈட்ட வேண்டும் என்ற ஆசையும் கட்டாயம் இருக்கும். நாம் நினைக்கும் அந்த நிலையை அடைய நமக்குள் ஒரு வேட்கை மற்றும் பணம் சார்ந்த புரிதல் மிக மிக முக்கியம். அது பணத்தை சேமிப்பதிலும், முதலீடு செய்வதிலும், செலவு செய்வதிலுமே அடங்கியுள்ளது.

இதற்காக பல யுத்திகளை பணம் சார்ந்து நாம் பயன்படுத்தினாலும், இறுதியில் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்ற பழக்கத்தையே பெரும்பாலும் நமக்கு இவ்வுலகம் கற்றுத்தர முனைகிறது.

உண்மையில் வளம் என்பது என்ன?

உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பிறரிடம் காட்டுவது பணவளம் கிடையாது. இன்று நீங்கள் பணம் ஈட்டுவதை நிறுத்தி விட்டால், தற்போது உங்கள் கையிருப்பாக இருக்கும் செல்வங்கள் எத்தனை காலம் வரை உங்களைக் காப்பாற்றும் என்பதே பண வளமாகக் கருதப்படும்.

ஆனால் தற்போது பெரும்பாலானவர்கள் தவணை முறையில் அனைத்தையும் வாங்கியே தன்னை வளமானவர்களாக காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு மாதம் பணம் ஈட்டுவதை நிறுத்தி விட்டால், அவர்கள் வாழ்க்கை அதோகதிதான்.

இந்த புத்தகம் மூலமாக நான் அறிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

1: உங்களுக்காக செலவு செய்யுங்கள்:-

உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று யாராலும் கணிக்க முடியாது. எனவே தற்போது நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியை உங்களுக்காக பயன்படும்படி முதலீடு செய்யுங்கள்.

அது சேமிப்பது ஆக இருக்கலாம். உங்கள் அறிவை வளர்ப்பதற்காக இருக்கலாம். மனவளம் உடல் வளத்தைப் காப்பதற்காக இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் இல்லை என்றால் நீங்கள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்திருந்தாலும் அதை உங்களால் பயன்படுத்த முடியாது.

2. பணத்தை முதலீடு செய்யுங்கள்:-

இது அனைவருமே சொல்லும் வாசகம் தான். ஆனால் நம்மில் பலருக்கு அதை எப்படி செய்ய வேண்டும் என்பதுதான் தெரிவதே கிடையாது. நான் இதைச் செய்யுங்கள் அதைச் செய்யுங்கள் என்று கூறப்போவதில்லை. ஏனென்றால் நான் வெற்றி கண்ட விஷயம் உங்களுக்கு ஒத்து வரும் என்று என்னால் கூற முடியாது. அது முழுக்க முழுக்க நீங்கள் செய்யும் முதலீட்டில் உங்களுக்கு உள்ள ஆழ்ந்த அறிவை பொறுத்தே அமையும்.

எனவே முதலீடு பற்றிய அறிவை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள். அது தானாக எப்படி நம் பணத்தை முதலீடு செய்யலாம் என்று தெளிவு உங்களுக்குள் ஏற்படுத்தும். பங்கு வர்த்தகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

3. செலவுகளை கவனியுங்கள்:-

எப்போதுமே பணம் ஈட்டுவதை விட செலவு செய்வது மிக மிக எளிது. ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க ஒரு நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்றால் அதை செலவு செய்ய ஒரு நொடி போதும். உங்களை செலவு செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் நீங்கள் செய்யும் செலவு நியாயமானதா என்று சிந்தியுங்கள்.

ஒவ்வொரு முறை ஏதேனும் தேவையில்லாத விஷயங்களுக்கு செலவு செய்யும் போது, நீங்கள் இழப்பது பணம் மட்டுமல்ல, அதை ஈட்டுவதற்கு எடுத்துக்கொண்ட நேரத்தையும் தான் என சிந்தியுங்கள்.

4. இரண்டாவது வருவாயை ஏற்படுத்துங்கள்:-

இரண்டாவது வருவாய் என்றதும், “எனக்கு வேலைக்கு சென்றுவிட்டு வந்து தூங்குவதற்கே நேரம் பத்தவில்லை. நான் எப்படி இரண்டாம் வருவாய் ஈட்டுவது” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் நம்முடைய நேரத்தை நாம் எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற முழு அதிகாரமும் நம்மிடமே இருக்கிறது. நாம் தான் அதை முழுமையாக நிர்வாகம் செய்கிறோம். உங்களுக்கு தற்போது நேரம் போதவில்லை என்றால் அதுவும் நீங்கள் எடுத்த முடிவுதானே.

நேரத்தை ஒரு சாக்காக எப்போதும் சொல்ல வேண்டாம். நீங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம். தற்போதிருக்கும் இணைய உலகில் உங்களுக்கான இரண்டாம் வருமானத்தை ஏற்படுத்துவது மிகவும் சுலபம்.

யூடியூப், பிளாக்கிங், பிரீலன்சர், வீடியோ எடிட்டிங், பாட்காஸ்ட், கிராபிக் டிசைனர் போன்றவை மூலமாக வீட்டிலிருந்தே பணம் ஈட்ட முடியும். இந்த சூட்சுமத்தை சற்று அறிந்து கொள்ளுங்கள்.

முதலீடுகளின் அரசன் வாரன் பஃபெட் என்ன கூறுகிறார் என்றால்,

நீங்கள் தூங்கும் போதும் பணம் சம்பாதிக்கும் திறமையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் வாழ்நாள் முழுவதும் பிறருக்கே உழைப்பீர்கள் என்கிறார்.

5. உங்கள் கொள்கைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்:-

உங்களுடைய வாழ்க்கையின் கொள்கை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ஏதேனும் குறிக்கோள் நீங்கள் வைத்திருந்தால், பிறருக்காக அதை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். ஏனென்றால் உங்களுடைய குறிக்கோளில் முக்கியத்துவம் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் தவறாக பேசுகிறார்கள் என்பதற்காக, அதை விட்டு விட்டால் வாழ்க்கையில் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை அறியாமல், ஏதோ ஒரு சுழற்சியில் சுற்றிக் கொண்டிருப்போம்.

உங்களுடைய குறிக்கோள் உங்கள் உயிரினும் மேலானது என்பதை உணருங்கள். அது மட்டுமே உங்களுடைய தினசரி வாழ்க்கையை வழி நடத்திச் செல்லும் உந்துதலை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கையை புத்துணர்ச்சியாக வைத்திருக்க குறிக்கோள் மிக மிக அவசியம்.

இறுதியாக, பணம் ஈட்டுதல் என்பது எப்போதும் முற்றுப்பெறாத ஒன்று. நாம் வாழும் காலம் வரை பணத்தின் தேவை மிக மிக முக்கியம். எதையும் சிந்திக்காமல் பணம் பணம் என்று ஓடுவதற்கு பதிலாக, அந்தப் பணத்தைக் கொண்டு நிதி சுதந்திரத்தை எப்படி அடையலாம் என சிந்தியுங்கள். பணத்தைக் கொண்டு பணம் செய்யும் தந்திரம் உங்களை ராஜா போன்று இருக்க வைக்கும். யாரையும் சார்ந்திராத நிலைக்கு உங்களை கொண்டு செல்லும்.

ஈட்டும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தவறான விஷயங்களில் முதலீடு செய்வதற்கு பதில், அதை முறையாகப் பயன்படுத்தி, உண்மையான பணவளத்தை உங்களால் உருவாக்க முடியும்.

பொய்ப் பணக்காரனாகக் காட்டிக் கொள்ள விரும்புகிறீர்களா? அல்லது உண்மையிலேயே பணக்காரத் தன்மையை அடைய விரும்புகிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.